×

மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமில்லை: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி: மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், இது அவசியமற்றது என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க அரசு தரப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் இந்த கோரிக்கை பிரதிபலித்தது.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்ய கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது. மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாதவிடாயை எதிர்கொள்ளும் சராசரி பெண்ணாக நான் இதை கூறுகிறேன்’ என்றார். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது தொடர்பான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் ஒன்றிய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.

The post மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமில்லை: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Smriti Irani ,New Delhi ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு